அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.

சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.

எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், “”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்,” என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார்.

முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். வயலில் வேலை செய்ததால் விவசாயிஎன்றும் பெயர் பெற்றார்.

இசைக்கும் திருமால், பிரம்மா:

நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இசைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரையும் இசையமைப்பாளர்என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

தெட்சிணாமூர்த்தி சிறப்பு:

பொதுவாக தெட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், இந்தக் கோயில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) உள்ள தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவரிடம் வேண்டிக்கொண்டால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

சிவன் நீர் இறைத்த கலம்:

சிவன், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. பங்குனி 20ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி தனி சன்னதியில் இருக்கிறாள். சண்டிகேஸ்வரர் இங்கு, மனைவியுடன் இருக்கிறார். புடைப்பு சிற்பமாக உள்ள விநாயகரை, நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு துர்க்கைக்கு தனி சன்னதி இருக்கிறது.

திருவிழா: வைகாசியில் 13 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம்.

இருப்பிடம்: கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ்வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது.

 

3 Responses to அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.

  1. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  2. jamuna says:

    அய்யா ஞானவெட்டியான் அவர்களே ,உங்கள் பக்தி blog இல் கடவுள் படங்களுக்கு உங்களது முத்திரை தேவையா .கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் .நீங்கள் பதிவேற்றியுள்ள படங்கள் அனைத்தும் வேறு வெப் சைட்டில் இருந்து எடுக்க (திருட)ப்பட்டது தானே

  3. கீழே footerஐ பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *